பூச்சரம் : இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS அறிவித்தல்கள் >> >>Directory For English Bloggers Launched >> www.orchidslk.co.nr >>

கேளுங்க.. கேளுங்க.. "கலையகம்" கிட்ட கேளுங்க..

பூச்சரம், தமிழ் பேசும் மக்களிடையே காத்திரமான பதிவுத்துறையை பிரபலமாக்கும் நோக்கில் செயற்படும் திரட்டியாகும்.

இந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக பிரபல பதிவர்களை பேட்டிகாணும் வாய்ப்பை அது கேளுங்க.. கேளுங்க.. என்ற பகுதியூடாக வழங்கிவருகிறது.

இத்தொடரின் மூலம் பதிவர்களிடையே கருத்துப்பரிமாறலையும், அனுபவ பகிர்வுகளையும் ஏற்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமுள்ள பதிவர் சமூகத்தை பூச்சரம் கட்டியெழுப்பமுடியும் என பூச்சரம் நம்புகிறது.

இத்தொடர் பூச்சரத்தின் அங்கத்தவர்கட்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் முழு தமிழ் வாசகர்கட்குமானதாகும்.




இத்தொடரில் கலையகம் என்ற வலைப்பூவினூடாக நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான மாற்று உலகத்தின் தேவையை வேண்டிநிற்கும் சிந்தனையாளர் கலையரசன் கலந்துகொள்ளவுள்ளார்.

வாசகர்கள் அவரது பதிவுலகம் மற்றும் பதிவுகளில் சொன்ன கருத்துக்கள் தொடர்பாக கேள்விகளை கேட்கலாம். 

கேள்விகள் அனைத்தும் பூச்சரத்தால் சேகரிக்கப்பட்டு பரிசீலனைக்குப்பின் பதிலுக்காக குறிப்பிட்ட பதிவருக்கு அனுப்பப்படும். (தனிப்பட்ட தாக்குதல்களை கொண்ட, அநாகரீகமான கேள்விகள் மாத்திரம் பூச்சரத்தால் நீக்கப்படும்). பதில்கள் பூச்சரத்துக்கு கிடைக்கப்பெற்றபின் அவை பூச்சரத்தில் பிரசுரிக்கப்படும்.

கேள்விகளை சமர்ப்பிக்க

"கலையகம் " கலையரசன்   தரும் அறிமுகம்

இலங்கையின் தமிழர் தாயகப் பிரதேசமாக கருதப்படும் வடபுலத்தை சேர்ந்திருந்த போதிலும், தலைநகர் கொழும்பில் நீண்ட காலம் வாழ்ந்திருக்கிறேன். தமிழர் விரோத கலவரங்கள் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்த போதிலும், பின்னர் பாதுகாப்பற்ற யுத்த சூழல் காரணமாக ஐரோப்பாவிற்கு புலம்பெயர நேரிட்டது. அவ்வாறு ஆரம்பித்த புலம்பெயர் படலம், பல்வேறு நாடுகளுக்கூடாக நாடோடியாக அலைய வைத்தது. எட்டு ஆண்டுகளாக நீடித்த அகதி வாழ்வின் இறுதியில், ஒரு பிரஜைக்கான உரிமைகளை மீளப் பெற்றுக் கொண்டேன். இருப்பினும் எனக்கு அனுபவப் பாடங்களை கற்றுத்தந்த நாடோடி வாழ்க்கை, இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் உத்வேகத்தை கொடுத்தது. இதுவரை இந்தியா, மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிற்கு மட்டுமல்லாது, எகிப்து, மொரோக்கோ போன்ற அரபு நாடுகளுக்கும், மேற்கே கியூபா வரை சென்று வந்துள்ளேன். பல வேறுபட்ட நாடுகளில் வசித்த காலங்களில், பல்வேறு மொழிகளை கற்றுக் கொண்டமை புதுமையான அனுபவம். ஆங்கிலம், டச்சு போன்ற மொழிகளில் பாண்டித்தியம் காரணமாக மும்மொழிகளில் சிந்திக்கும் ஆற்றல் வந்தது. கொழும்பு வாழ்க்கை காரணமாக கொஞ்சம் சிங்களமும் ஒட்டிக்கொண்டது. ஐரோப்பாவிற்குள்ளேயே இடம்பெயர்ந்த காரணத்தால், ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிய, கிரேக்க மொழிகளையும் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் பன்மொழிகளை அறிந்திருந்த போதிலும், தாய்மொழியான தமிழைக் கைவிடவில்லை.

இனவாதப் போரினால் விரட்டப்பட்டு சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் புகுந்த நேரம், தமிழ் பத்திரிகை ஒன்றை வெளியிட்டோம். ஐரோப்பிய நாடொன்றில் அகதிகளினதும், வெளிநாட்டவர்களினதும் பிரச்சினைகளை தமிழருக்கு அறியத்தரும் நோக்கில் வெளிவந்த அந்த பத்திரிகை மூலமாக, மேற்கு ஐரோப்பாவின் குடியேற்ற சட்டங்கள், அரசின் வெளிநாட்டவர் குறித்த நிலைப்பாடு குறித்த அறிமுகம் ஏற்பட்டது. தொடக்கத்தில் சில கவிதைகள், கதைகள் என்று கிறுக்கிக் கொண்டிருந்த என்னை, பத்திரிகைத்துறை சமகால அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுத வைத்தது. பரந்துபட்ட மக்களுடன் தொடர்பு கொள்ள வைக்கும் தொலைத் தொடர்பு சாதனங்களின் சக்தியையும் அறிந்து கொண்டேன்.

சுவிஸ் அரசின் பகிரங்கமான இனப்பாகுபாடு அரசியலால் வெறுப்புற்று, நெதர்லாந்தில் தஞ்சம் கோரிய காலத்திலும், அரசியல் அகதியாக இருந்த காரணத்தால், அந்நாட்டு சட்டங்களை, வெளிவிவகார அரசியலை கற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அகதி முகாம்களில் இருந்த காலத்தில் பல்வேறு ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க அரசியல் அகதிகளில் பரிச்சயம் ஏற்பட்டது. பன்னாட்டு நண்பர்கள் மூலம் சர்வதேச பிரச்சினைகளைப் பற்றிய ஆழ்ந்த அறிவு பெற முடிந்தது. சர்வதேச அமைப்புகளை சேர்ந்தவர்களின் நட்பு என்பன, மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சினைகளுக்காக போராடும் அனுபவத்தை கொடுத்தது. எனது அனுபவங்களினூடாக பெற்றுக்கொண்ட, உலக நாடுகளைப் பற்றிய ஆழமான புரிதல் காரணமாக, ஐரோப்பிய மையவாத கண்ணோட்டத்தை திருப்பிப்போடும் உத்வேகம் ஏற்பட்டது. பன்னாட்டு பிரச்சினைகளுடன் எமக்குள்ள ஒருமைப்பாட்டையும், அவற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் அறியத்தருதல். நான் கண்ட உண்மைகளை பரந்துபட்ட வெகுஜன தளத்திற்கு கொண்டு செல்லும் ஊடகமாக எனது எழுத்துக்களை கருதுகிறேன்.


 கேள்விகளை சமர்ப்பிப்பதற்கான இறுதித்திகதி  08.01.2010

பூச்சரத்தின் இம்முயற்சி தொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்க எமக்கு எழுதுங்கள்.
poosaramlk@gmail.com

  © பூச்சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS Poosaram www.poosaram.tk 2010

Back to TOP